Pongu Tamizh Pongu Tamizh  

இந்தியாவை அறிந்து கொள்ளல் – 3

இந்தியாவை அறிந்து கொள்ளல் – 3
அநபாயன்

 

முந்தைய பதிவுகளில் கூறியது போல இந்திய தேச நிர்மாணம் என்பது பன்முகப்பட்டதாகவும், பன்முகச் சவால்கள் நிறைந்ததாகவுமே நேருவுக்கு காணப்பட்டது. அவ் வகையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது பல்வேறுபட்ட உள்ளக அரசியல் காரணிகளால் வழிப்படுத்தப்பட்டதாகவும் காணப்பட்டது.

குறிப்பாக நேருவின் அணிசேராக் கொள்கை நிலைப்பாடானது பெருமளவில் சித்தாந்த நிலைப்பட்டதாக இருப்பினும், காஷ்மீர் விடயத்தில் மேற்கு நாடுகளின் ஆதரவு இந்தியாவிற்கு கிடைப்பதற்கும், அரபு - முஸ்லீம் நாடுகளின் ஆதரவு பாகிஸ்தானுக்கு கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், நேருவின் அணிசேராக் கொள்கை வாய்ப்பாக இருந்தது. நேரு அரபுத் தேசியவாதத்தின் ஒரு பலம்மிக்க ஆதரவாளராகவே தன்னைக் காட்டிக்கொண்டார். இதன் காரணமாக காஷ்மீர் விடயத்தில் அரபு நாடுகள் பாகிஸ்தானுக்கு பெருமளவில் ஆதரவளிக்கவில்லை.

கடந்த பதிவில் குறிப்பிட்டது போன்று, இந்திய சீன எல்லைப் போரானது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு மூலோபாய வரலாற்றில் ஒரு பாரம்பரிய களங்கமாகவே இன்றுவரை பார்க்கப்படுகின்றது. இது பற்றி விபரமாகப் பார்ப்பது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் இன்றைய செல் நெறியை விளங்கிக்கொள்வதற்கும், அதன் அண்டை நாடுகளுடனான உறவுகளை பகுப்பாய்வு செய்து கொள்வதற்கும் மிகவும் அவசியமாகும்.

இந்தியாவும் சீனாவும் ஆயிரக்கணக்கான மைல்கள் நீளமான எல்லைப் பிரதேசத்தை தம்மிடையே பகிர்ந்துகொண்டாலும், குறிப்பாக இரண்டு பிரதேசங்களிலேயே எல்லை தொடர்பான பிரச்சினை முக்கியமாகக் காணப்பட்டது. காஷ்மீர் பிரதேசத்தின் ஒரு பகுதியாக விளங்கும் லடாக் (Ladakh) பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சீனா ஒரு கணிசமான பிரதேசத்தை தனக்குரியது என்று உரிமை கோரியிருந்தது.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் லடாக் பிரதேசமானது ஒரு தனித்த இராச்சியமாக கி.பி. பத்தாம் நூற்றாண்டு முதல் இருந்து வந்ததுடன், கடைசி 150 ஆண்டுகளாக காஷ்மீர் அரசின் ஒரு பகுதியாக விளங்கி வந்தது. லடாக் பிரதேசமானது சீனாவின் Sinkiang பிரதேசத்துடன் எல்லையைக் கொண்டுள்ளதுடன், Aksai Chin எனப்படும் மனித சஞ்சாரமற்ற மேட்டுநில கட்டாந்தரைப் பிரதேசம் ஒன்றை Sinkiang பகுதியின் எல்லையாகக் கொண்டிருந்தது.

அதேவேளையில் சீனாவின் பெரு நிலப்பரப்பில் இருந்து தீபெத் பிரதேசத்தை அணுகக்கூடிய நுழைவாயிலாக சீனாவின Sinkiang பிரதேசமே காணப்பட்டது. அந்த வகையில் புவியியல் ரீதியாக சவாலளிக்கக்கூடிய தீபெத் பிரதேசத்தை அணுகக்கூடிய தரைப் பாதை ஒன்று Sinkiang பிரதேசத்திலிருந்து அமைக்கவேண்டிய தேவை சீனர்களுக்கு ஏற்பட்டிருந்தது. எனவே அவ்வாறான ஒரு நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதற்கு Aksai Chin பிரதேசம் வாய்ப்பான ஒன்றாக காணப்பட்டது.

சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளைக் கொண்ட இன்னொரு முக்கியமான பிரதேசமாக விளங்குவது, இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசங்களாக விளங்கும் அருணாசல பிரதேசம், சிக்கிம் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தின் ஒரு கணிசமான பகுதியாகும்.

அசாம் மாநிலத்தில் உள்ள வளமான தேயிலைத் தோட்டங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம், பிரித்தானிய காலனி அரசானது அப்போதய சுயாதீனமான தீபெத்திய அரசுடன், 1914 இல் எல்லை தொடர்பான ஓர் இணக்கத்திற்கு வந்திருந்தது. சீனா, தீபெத் மற்றும் இந்தியாவிலுள்ள பிரித்தானிய காலனி அரசுகள் சிம்லாவில் கூடி தீபெத் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன. அந்தப் பேச்சுகளின்போது பிரித்தானிய காலனி அரசானது தீபெத் மீதான சீனாவின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டாலும் தீபெத் சீனாவின் இறையாண்மைக்குள் வரவில்லை என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்த காரணத்தால் சீனா மாநாட்டிலிருந்து வெளியேறியது.

இறுதியில் பிரித்தானிய காலனி அரசும் தீபெத் அரசும் ஓர் உடன்பாட்டிற்கு வந்திருந்தன. இந்த உடன்பாட்டில் Mc Mahon எல்லைக் கோடு பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. Mc Mahon எல்லைக் கோடானது புவியியல் ரீதியாக இமய மலைத் தொடரின் அடிவார விளிம்பு வழியே செல்கின்ற தீபெத்திய பிரதேசத்தையும் தற்போதய அருணாசல பிரதேசத்தையும் பிரிக்கின்ற ஒரு கற்பனையான எல்லைக் கோடாகும். இந்த எல்லைக் கோட்டை அப்போதைய சீன அரசு நிராகரித்திருந்தது.

இத்தகைய பின்னணியில் மேற்கூறிய இரு பிரதேசங்களிலும் சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையில் தெளிவான எல்லை நிர்ணயம் இல்லாதிருந்த சூழலில், 1947 இல் சுதந்திரமடைந்த இந்தியாவும் 1949 இல் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் நிறுவப்பட்ட மக்கள் சீனக் குடியரசும் தமது எல்லைகளை பாதுகாக்க சமகாலத்தில் முயன்றன.

மேற்கூறிய இரு பிரதேசங்களுமே புவியியல் ரீதியாக சவால் மிக்க மலைப் பிரதேசங்களாகும். அங்கே பல்வேறு பழங்குடி மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். ஆனாலும் மனித சஞ்சாரம் என்பது மிகவும் குறைவான பிரதேசங்களாகவே காணப்பட்டன. அத்துடன் உட்கட்டுமான வளர்ச்சி எதுவுமற்ற பிரதேசங்களாக இருந்த காரணத்தால், சீனாவும் இந்தியாவும் தமது அரசு அதிகார வீச்சை அதிவேகமாக இப் பிரதேசங்களில் கொண்டுவர முடியவில்லை.

இந்த இடத்தில் புதிதாக நிறுவப்பட்ட மக்கள் சீனக் குடியரசு பற்றி சுருக்கமாகப் பார்ப்பது மிகவும் அவசியமாகின்றது. 1912 இல் Qing அரச குடும்பத்திற்கு எதிரான புரட்சியின் பின்னர் சீனா தொடர்ச்சியான உள்நாட்டு யுத்தத்துக்கு உள்ளாகியதுடன், இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்தது. 1949 இல் மாவோ தலைமையிலான மக்கள் விடுதலை இராணுவம் சீனப் பெருநிலம் முழுவதையும் சியாங்கை சேக் தலைமையிலான தேசியவாத படைகளிடமிருந்து கைப்பற்றியதுடன் மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டது.

சீன தேசத்தைப் பொறுத்தவரை ஏறத்தாழ அரை நூற்றாண்டுகால உள்நாட்டு யுத்தம் மற்றும் அவமானங்களிலிருந்து ஒரு விடுதலையாகவே புதிய கம்யூனிச அரசு விளங்கியதுடன் இழந்த பிரதேசங்களை மீளப் பெறுவதும், காயப்பட்ட சீனத் தேசியத்தை ஆற்றுவதும், அப்போதைய தேவையாக இருந்தது. அந்த வகையில் தீபெத்தை மீளவும் தமது ஆளுகைக்குள் கொண்டு வருவது என்பது மாவோவின் முக்கியமான உடனடித் தேவையாக இருந்தது. 1951 இல் தலாய்லாமா அரசு சீனாவின் இறைமையை ஏற்றுக்கொண்டு 17 அம்ச உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

இவ்வாறாக படிப்படியாக தீபெத்தில் சீன இராணுவப் பிரசன்னம் அதிகரிக்கத் தொடங்கியது. சீன இராணுவத்திற்கான வழங்கற் பாதையொன்று சீனாவின் Sinkiang பிரதேசத்திலிருந்து சர்ச்சைக்குரிய Aksai Chin பகுதியின் ஊடாக சீன இராணுவத்தால் கட்டப்பட்டது. இவ்வாறான ஒரு நெடுஞ்சாலை Aksai Chin பகுதியில் சீனர்களால் கட்டப்பட்டமை 1959 இல்தான் இந்தியாவுக்கு தெரியவந்தது.

அதே வேளையில் இந்நிலப் பகுதியிலிருந்து எல்லைப்பகுதி நோக்கி படிப்படியாக பாதுகாப்புப் படைகள் மற்றும் அரச இயந்திரத்தின் நிர்வாகக் கட்டமைப்புகள் நகர்த்தப்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரையில் பாகிஸ்தானே மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதப்பட்டதன் காரணமாக இந்திய இராணுவத்தின் முழுக் கவனமும் பாகிஸ்தானுடனான எல்லைப் பிரதேசத்திலேயே குவிக்கப்பட்டிருந்தது.

சீனாவுடனான எல்லைப் பகுதிகள் இந்திய உளவுத்துறையின் கீழ் இயங்கிய துணை இராணுவப் படைகளாலேயே பாதுகாக்கப்பட்டு வந்தன. 1959 இல் சீன இராணுவத்துக்கும் இந்திய துணை இராணுவப் படைகளுக்கும் இடையில் சில இடங்களில் மோதல்கள் நடைபெறத் தொடங்கிய பின்னரே இந்திய இராணுவம் சீன எல்லைப் பகுதிகளை நோக்கி நகர்த்தப்பட்டது. இதே காலப் பகுதியில் தீபெத்தில் சீன இராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் நடைபெறத் தொடங்கின. ஆரம்பத்தில் கிழக்குப் பகுதி காம்பாவில் ஆரம்பித்த கிளர்ச்சியானது பின்னர் தலைநகர் லாசாவிலும் பரவியது. இந்தக் கிளர்ச்சிக்கு சீஐஏ ஆயுதங்களை வழங்கியிருந்ததுடன் தொடர்ச்சியாக தீபெத் கிளர்ச்சியாளர்களுக்கு 1972 வரை உதவி வந்தது.

தீபெத் கிளர்ச்சிக்கு எதிரான சீன இராணுவத்தின் பதிலடி மிகவும் உக்கிரமாக இருந்ததுடன் மிக மோசமான தாக்குதல்களை தீபெத்திய மக்கள் மீது நடாத்தியிருந்தது. இறுதியில் 1959 இல் தலாய்லாமா இரகசியமாக எல்லையைக் கடந்து இந்தியாவில் அரசியல் தஞ்சம் கோரினார். இத்துடன் இந்திய சீன உறவுகள் மேலும் பாதிப்படையத் தொடங்கியது எனலாம்.

1958 இல் சீன அரசினால் உத்தியோகபூர்வமான வரைபடங்கள் வெளியிடப்பட்டன. இந்த வரைபடங்களின் அடிப்படையில் சீனா சர்ச்சைக்குரிய இரண்டு பிரதேசங்களையும் தனது ஆளுகைப் பிரதேசங்களாகக் குறிப்பிட்டிருந்தது. இதுவே முதன்முறையாக சீனா எல்லை தொடர்பான தனது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தருணமாகும். இந்த வரைபடங்கள் ஓர் இராசதந்திர கடிதப் போக்குவரத்துக்கு வழிவகுத்தது. ஆரம்பத்தில் அதிகாரிகள் மட்டத்தில் தொடங்கிய கடிதப் போக்குவரத்து இறுதியில் இந்தியப் பிரதமர் நேருவிற்கும் சீனப் பிரதமர் சூ என் லாயிற்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தாக மாற்றமடைந்தது. நேருவின் காங்கிரஸ் அரசு எல்லைப் பிரச்சினை தொடர்பான இராசதந்திர தொடர்பாடல் பற்றி 1960 வரை பகிரங்கப்படுத்தவில்லை. 1960 இல் நிலைமை மோசமடைந்த பின்னர் எதிர்க்கட்சிகள் விளக்கம் கோரிய பின்னரேயே நேரு ஒரு வெள்ளை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தார்.

பலவீனமான இந்திய இராணுவம்.

1950களில் இருந்த இந்திய இராணுவம் பெருமளவில் பிரிட்டிஷ் காலனி அரச காலத்தில் கட்டமைக்கப்பட்ட இராணுவமாகவே விளங்கியது. 1947 இல் பிரித்தானியர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறியது முதல் இந்திய இராணுவம் பெருமளவில் நவீன மயப்படுத்தலுக்கு உட்படவில்லை என்றே சொல்லலாம். சீனாவுடனான எல்லைப் பிரச்சினை மோசமடையத் தொடங்கியதன் பின்னரே பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கத் தொடங்கியது. ஆனாலும் இது துரிதமான நவீனமயப்படுத்தலுக்கு ஏற்றளவுக்கு காணப்படவில்லை.

1950களிலும் இந்திய இராணுவம் முதலாம் உலக யுத்தகால ஆயுதங்களையே பெருமளவில் பாவித்ததுடன், கனரக ஆயுதங்கள் பற்றாக்குறையாக விளங்கியது. இத்தகைய பின்னணியில் இந்திய பாதுகாப்புத் துறையின் தலைமைப் பீடத்தில் காணப்பட்ட சித்தாந்த ரீதியான கெடுபிடிகள் காரணமாக மேற்கு நாடுகளிடமிருந்து நவீன ரக ஆயுதங்களை பெறுவதில் சிக்கல் காணப்பட்டது. அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த கிருஷ்ணமேனன் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாவார். கடுமையான சோசலிசக் கொள்கையும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கையும் கொண்ட அவரிடம் இராணுவத் தளபதி திம்மையா பெல்ஜியத் தயாரிப்பான FN4 தானியங்கி துப்பாக்கிகளை அனுமதிப்பத்திரத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தபோது, நேட்டோ ஆயுதங்களை இந்த நாட்டுக்குள் கொண்டுவரத் தான் தயாராக இல்லை என்று கிருஷ்ணமேனன் ஆத்திரத்துடன் பதிலளித்ததாகக் கூறப்படுகின்றது.

அத்துடன் நேருவின் அணிசேராக் கொள்கை காரணமாக மேற்கு நாடுகளிடமிருந்து பெருமளவில் உதவி கிடைக்கப் பெறவில்லை என்பதுவும் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. அதே வேளையில் சோவியத் யூனியன் ஓரளவிற்கு உதவிகளை வழங்கியிருந்தாலும், இந்திய சீன யுத்த காலப் பகுதியில் நடுநிலை வகித்ததுடன் இந்தியாவுக்கு ஆயுத உதவி செய்வதற்கு மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் அமெரிக்காவே இந்தியாவின் உடனடி ஆயுதத் தேவைகளை பூர்த்தி செய்தது. ஆயுதப் பற்றாக்குறைக்கு அப்பால் இந்திய இராணுவத்தின் பயிற்சியும் சீன இராணுவத்திற்கு ஒப்பானதாக இருக்கவில்லை. சீனாவின் மக்கள் விடுதலை இராணுவமானது தொடர்ச்சியான யுத்தங்கள் காரணமாக பயிற்சித் தரத்தில் உயர்ந்தே காணப்பட்டது. அத்துடன் மலைப் பிரதேச போர் அனுபவம் என்பது இந்திய இராணுவத்துக்கு குறைவாகவே காணப்பட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனனால் கிழக்குப் பிராந்திய தளபதியாக நியமிக்கப்பட்ட கோல் (Kaul) முன்னரங்க யுத்த அனுபவம் குறைந்த ஒருவராவார். இவரின் சில முடிவுகள் காரணமாக நூற்றுக்கணக்கான இந்திய இராணுவத்தினர் சீன இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்படும் நிலை உருவானது. இவ்வாறாக மிகவும் பலவீனமான சூழல் இருந்தாலும் 1960 முதல் இந்திய இராணுவமானது எல்லைகளை நோக்கி மேலும் நகர்ந்து வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாட்டைத் தொடர்ந்து செய்து வந்தது. இறுதியில் இவ்வாறான ஒரு 'முன்னேறிச் செல்லும்' நடவடிக்கை காரணமாகவே முழு வீச்சிலான சீன தாக்குதல் 1962 இல் நடைபெற ஏதுவாகியிருந்தது.

இக்கட்டுரைத் தொடரின் முதல் இரண்டு பகுதிகளையும் கீழுள்ள இணைப்புகளில் காணலாம்.

7/28/2010 3:32:29 PM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

 
புதினங்கள்
செய்திகள்